தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு அதிமுக கட்டமைக்கப் போகும் கூட்டணி திமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?..!

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு அதிமுக கட்டமைக்கப் போகும் கூட்டணி திமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?..!

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு அதிமுக கட்டமைக்கப் போகும் கூட்டணி திமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா?!.

வெளியேறிய அதிமுக:

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும்போது `நாங்கள் தான் எதிர்க்கட்சி’ என்று சொல்லி பலமுறை அதிமுகவைச் சீண்டிக்கொண்டிருந்தது பாஜக. அதற்கு அந்தந்த சமயத்திலும் அதிமுக சார்பிலும் தக்க பதிலடி கொடுத்து வந்தார்கள். அதிமுக – தமிழக பாஜக-வுக்கிடையே நீண்ட நாள்களாக ஒரு பனிப்போர் நிலவிக்கொண்டேதான் இருந்தது. அதிலும் அண்மைக் காலங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவின் மூத்த தலைவர்களை விமர்சனம் செய்தது அந்த கட்சி தொண்டர்களை ஆத்திரமடைய வைத்தது. இந்த சுழலில் சமீபத்தில் அண்ணாமலை, அண்ணா குறித்துப் பேசிய கருத்து அதிமுக-வினரை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

இதனையடுத்து, சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மொத்தமாக விலகிக் கொள்வதாக அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது அதிமுக தலைமை. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த மிகப்பெரிய கட்சி வெளியேறியது தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் பேசுபொருளானது. இந்த தாக்கம் அடங்குவதற்குள் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, `இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது’ என்று திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். இது சமரச முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பாஜக தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது.

கொண்டாட்டத்தில் அதிமுக:

பாஜக தேசிய தலைவர்களுடனும், தலைமையுடனும் அதிமுக மூத்த நிர்வாகிகள் அனைவருமே மிகவும் நெருக்கமாகவே இருந்தனர். டெல்லி பாஜக தலைமையுடன் அதிமுக தலைமையும் ஒத்துப்போனது. ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல், முரண்பாடுகள் மட்டுமே இந்த கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறன. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைமை அறிவித்தவுடனே அதிமுக தொண்டர்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

எங்களின் நீண்ட நாள் கோரிக்கையைத் தலைமை ஏற்றுள்ளது என்று சொல்லி ரத்தத்தின் ரத்தங்கள் குதூகலிப்படைந்தார்கள். பாஜகவுடன் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது அதிமுக. அடுத்தபடியாக வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இப்போதே கட்டமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது அதிமுக. ‘வரும் தேர்தலில் அதிமுக கட்டமைக்கப்போகும் தேர்தல் கூட்டணி திமுகவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா. இதனை எதிர்கொள்ள திமுக என்ன திட்டமிருக்கிறது’ என்பதே தற்போதைய அரசியல் பிரதான பேசுபொருளாகியிருக்கிறது..

திமுக-வுக்கு நெருக்கடி:.

கூட்டணி முறிவு விவகாரத்தில் அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது தொடர்பாகவும், இது திமுகவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாகவும் அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். “அதிமுக-வைப் பொறுத்தவரை இவ்வளவு ஆண்டுகள் பாஜகவுடன் மிகுந்த நெருக்கத்துடன் காணப்பட்டது. நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும்போது கூட அமித் ஷாவுக்காக ஆதரவு தெரிவித்தோம் என்று காரணம் சொன்னார்கள். அதேபோல, பாஜக-வுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் வந்தபோதும் அதற்கு ஏதாவது காரணம் சொல்லி விமர்சனம் எதுவும் சொல்லாமல் சமாளித்து வந்தார்கள். தற்போது கூட்டணி இல்லை என்று ஆன நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கச் செல்லும்போது 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசைக் குறை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். அதனை அதிமுக செய்யுமா என்பது சந்தேகம்தான். அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவைக் குறை சொல்லி வாக்கு கேட்டாலும் அது எந்த அளவுக்கு எடுபடும் என்பதும் கேள்விதான்..

2024-ம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும், 2026-ம் ஆண்டு தேர்தல்தான் அதிமுகவுக்கு மிக முக்கியமான ஒன்று. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சில இடங்களை வென்றால் கூட அது அதிமுகவுக்குப் பெரிய வெற்றியாகவே இருக்கும். ஆனால், தற்போதைய தமிழக அரசியல் சூழலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியிலிருந்த காரணத்தினால் பல சிறிய காட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயக்கம் காட்டின. தற்போது அந்த தயக்கத்துக்கான காரணத்தைச் சரிசெய்து வைத்திருக்கிறது அதிமுக. இதனால், மற்ற கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முன்வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

தற்போதைய நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகள் முன்பு கேட்டதை விட அதிக தொகுதிகளைக் கேட்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்படி திமுக தர மறுக்கும் நிலையில் அந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்குச் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்த கூட்டணி முறிவு திமுகவுக்கு சிறிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் அதிமுக, பாஜக என இரு கட்சிகளுக்கும் வாக்கு வங்கி உள்ள ஒரு சில தொகுதிகள் உள்ளன. அங்கு வாக்குகள் பிரியும். அது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும்” என்றார்கள்..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..