“விநாயகர் சதுர்த்தி” எதற்குக் கொண்டாடப்படுகின்றது?
விநாயகர் சதுர்த்தி என்பது, சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயசக்திகளை அழித்து, அவர்தம் வினைகளை நீக்கி, அருள்தரும் விநாயகப்பெருமானை ஆவணி மாத சதுர்த்தி அன்று இவ்வுலகோர் உய்ய சிவபெருமான் அருளிய நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகை “விநாயகர் சதுர்த்தி”ஆகும்.
விநாயகர்-கணபதி-பிள்ளையார் !
விநாயகர் : சிவசக்தி வடிவில் “தீயவை-அழித்தல், வினை-களைதல், அருள்-தருதல்” என்ற மூன்றும் ஒருங்கே ஓர் மூர்த்தியாக விளங்குவதால், “தனக்கு மேலான தலைவன்(நாயகன்) இல்லாதவர்” என்று பொருளில் விநாயகர் என்று அழைக்கப் படுகிறார்..
கணபதி என்றால் சிவ கணங்களின் தலைவன் என்று பொருள்.
பிள்ளையார் : இவரை மூத்த பிள்ளையார் என்றும் கூறுவார்கள். ஏன் ? சிவபெருமானுக்கு நான்கு பிள்ளைகள் – கணபதி, வைரவர், வீரபத்திரர் ,முருகன் ஆவர். முருகனை இளைய பிள்ளையார் என்று கூறுவார்கள். இப்பிள்ளைகளில் மூத்தவர் விநாயகர் அதனால் மூத்த பிள்ளையார் ஆனார்.
ஆரியர் “விநாயகர் புராணம்!” – பகுத்தறிவுக்குப் புறம்பானது!
விநாயகருக்கு ஏன் யானை முகம் வந்தது என்பதற்கு ஆரியர் எழுதிய புராணம் என்ன சொல்கிறது என்று முதலில் பார்க்கலாம்!
“கஜமுகாசுரன் பிரம்மாவிடம், ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று ஒரு வரம் பெற்றானாம். ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. (அவன் கணக்கை ஏமாற்ற, இறைவன் பெயரால், ஆரியர் விட்ட புருடாதான் விநாயகர் புராணம்) அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தானாம். தேவர்களை வதைத்ததால். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க அன்னை பார்வதிதேவி, தன் மேனியிலிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கி உருவாக்கிய குழந்தைக்கு, “பிள்ளையார்’ என பெயர் சூட்டி, அந்தப்புர காவலனாக நியமித்தாளாம்! அந்தப்புரம் வந்த சிவபெருமான் பிள்ளையாரால் தடுத்து நிறுத்தப்படவே, “என் அந்தப்புரத்தில் என்னைத் தடுக்க நீ யாரடா?’ எனச் சினமுற்று, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டாராம்! துடிதுடித்த பார்வதி அன்னை, தன் பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என வேண்ட, சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்துக் கிடந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.” என்கிறது ஆரியர்கள் கட்டவிழ்த்த விநாயகர் புராணப் புருடா!
பகுத்தறிவுக்குப் பொருந்தாத இந்தக் கதையைத்தான் பகுத்தறிவுவாதிகள் கன்னா பின்னாவென்று கலாய்க்கிறார்கள். திருஞானசம்பந்தர் அருளிய பகுத்தறிவுக்கு ஏற்புடைய விநாயகர் அவதாரப் புராணம்!
சிறுத்தொண்ட நாயனார் வாதாபியிலிருந்து கொண்டுவந்த விநாயகரை, திருவலிவலம் திருத்தலத்தில் நிறுவியபோது, விநாயகப் பெருமான் குறித்த ஆரியப் புராணத்தை நிராகரித்து, பகுத்தறிவுக்குப் பொருந்தும் விநாயகர் புராணத்தை நமது முதல் சமயக்குரவரான ஆளுடைய பிள்ளையார் சம்பந்தர் சுவாமிகள் தமது திருமுறை பாடலிலே அழகாக அருளினார்..
திருமுறை-1, பதிகம் 123, பாடல் 5,6 திருவலிவலம்
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே..
சம்பந்தர் பெருமான் அருளிய பகுத்தறிவுக்கு ஏற்ற விநாயகர் புராணம் விளக்கும் இப்பாடல் “அன்னை உமாதேவி பெண் யானை வடிவம் கொண்டு மேவ, தந்தை சிவபெருமான் ஆண் யானை வடிவம் தாங்கி, தம்மை எப்போதும் வணங்கும் அடியவர் தம் இடர் போக்கும் பொருட்டு, கணபதிநாதன் தோன்ற அருள் புரிந்த சிவபெருமான், மிகுந்த வள்ளல் தன்மை மிக்க சிறந்தவர் வாசம் புரியும் வலிவலத்தில் உறைகின்ற இறைவனாவார்.” என்கிறது
இந்த பாடலில் உமாதேவி பெண்யானை(பிடி)யின் வடிவுகொள்ள, ஆண் யானை(கரி)யின் வடிவத்தைத் தாம் கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம் பற்றிய இறைவன் வலிவலத்தில் உறைகின்றான் என்று தெளிவாக விநாயகர் அவதாரம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இங்கு உள்ள இறைவன் ஆகிய மனத்துணைநாதர் ஆண் யானை (கரி) வடிவு கொண்டு, அம்மை மாழையங்கண்ணி பெண் யானை (பிடி) வடிவு கொள்ள, தன் திருவடிகளை வழிபடும் அடியவர்களின் இடர்களைக் களைய வேண்டி, கணங்களுக்கு எல்லாம் பதியாக, கணபதி வருவதற்குத் திருவுள்ளம் பற்றி அருள் புரிந்தார் என்பதாம். என்னே அவரின் கருணைத்திறம்?
[பிடி – பெண்யானை. கரி – ஆண்யானை. வடிகொடு – வடிவத்தைக் கொண்டு. கடி கணபதி – தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் – வள்ளல் தன்மையினர்]
இதே பொருள் கொண்ட விநாயகர் புராணம் திருஞானசம்பந்தர் பெருமானால், திருஅச்சிறுப்பாக்கம் பதிகத்திலும் மீண்டும் அருளப்பட்டது!
திருமுறை 1, பதிகம் 77 ,பாடல் 3 : திருஅச்சிறுப்பாக்கம்
காரிருள் உருவ மால்வரை புரையக்
களிற்றினதுஉருவுகொண்டுஅரிவைமேல்ஓடி
நீர் உரு மகளை நிமிர்சடைத்தாங்கி
நீறணிந்து ஏறுஉகந்து ஏறிய நிமலர்
பேரருளாளர் பிறவியில் சேரார்
பிணியிலர்கேடிலர் பேய்க்கணம் சூழ
ஆர் இருள் மாலை ஆடும் எம்மடிகள்
அச்சிறுபாக்கமது ஆட்சிகொண்டாரே.
அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சி புரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண்யானை வடிவு கொள்ள தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். கங்கையை மேல் நோக்கிய சடையினில் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பு இறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன் மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்..
இறைவர், உமையம்மை பெண்யானையின் வடிவங்கொள்ள, ஆண்யானையாய்த் தொடர்ந்து சென்றும், நீர்மகளைச் சடையில் தாங்கியும், விடையேறியும், நீறுபூசியும் விளங்கும் நிமலர், பேரருளாளர், பேய்க்கணம் புடைசூழ நள்ளிருளில் நடமாடுபவர் என்கின்றது.
[கார் இருள் உருவம் மால்வரை புரைய – கறுத்த இருட்பிழம்பின் உருவத்தையும், கரிய மலையையும் ஒத்த. அரிவை – பெண்யானையாகிய உமாதேவி. இது பிடியதன் உரு உமைகொள மிகு கரியது வடிகொடு
நடந்தமையைக் காட்டுவது. நீர் உருமகள் – கங்கையாகிய அழகிய மகள். பிறவியில் சேரார் – இங்ஙனம் நினைத்த வடிவத்தைத் தாமே மேற்கொள்ளுதலன்றி, வினைவயத்தால் வரும் பிறவியில் சேராதவர். ஆர் இருள் மாலை – நிறைந்த இருட்கூட்டம்.]
“ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்று திருவாசகம் போற்றும் ஓரிறை சிவபெருமான், வேண்டும்போது வேண்டிய உருக்கொள்ளும் முழுமுதற்கடவுள்; வினைப்பயனால் உடல்வாழ்வு பெறும் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; அலியும் அல்லன்.
அவன் அருள்-வடிவமே நாம் அன்னையாக வழிபடும் சக்தியாகும். (அருள்தன் சக்தியாகும் அரன் தனக்கே!) இறைவன் திருவுளம் தனது அடியவரின் துயர்களைய அருள்கொண்டது; இறைவனின் அருளுருவமாம் உமைஅன்னை பிடி என்னும் பெண்யானையாகவும், இறைவன் ஆண்யானையாகவும் வேண்டுருக்கொண்டு, விநாயகப் பெருமானை அருளினான் என்பது திருஞான சம்பந்தர் பெருமான் அருளிய விநாயகர் புராணம்.
இறைவனின் சிவ-சக்தி வடிவம் பிள்ளையார் என்பதால்,
பிள்ளையாரே சகல நன்மை அருள்பவராகவும்,
அனைத்து வினைத் துன்பங்கள் நீக்கும் விநாயகராகவும்,
தீயசக்திகளை அழிக்கும் கணநாதராகவும் திகழ்கின்றார்
என்று பகுத்தறிவுக்கு ஏற்ற விநாயகர் புராணம் இயற்றினார் அன்னையிடம் ஞானப்பால் உண்ட ஆளுடைப்பிள்ளையார் திருஞான சம்பந்தர்!
வாதாபி சென்று வெற்றிகொண்டு திரும்பிய சிறுத்தொண்டர் நாயனார் கொண்டுவந்த வாதாபி கணபதியே தமிழ்நாட்டுக்கு வந்த முதல் விநாயகப்பெருமான் ஆவார். அந்த வாதாபி கணபதி விநாயகருக்கே திருஞானசம்பந்தர் “செல்லுமளவும் செலுத்துமின் சிந்தையை!” என்ற சைவசித்தாந்த வழி, பகுத்தறிவுக்கு ஏற்ற சிறந்த உண்மைப் புராணம் இயற்றினார்!
நமது நிருபர்கள்..
விசாரணை களம் குழுவின் சார்பாக அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்….!!!