இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இதுவரை சொல்லப்படாத ஒரு சோதனையை சந்திரயான் -3 திட்டத்தில் மேற்கொண்டுள்ளது. விண்கலத்தின் லேண்டர் தொகுதியை நிலவின் மேற்பரப்பில் இருந்து உயர்த்தி வேறு ஒரு இடத்தில் தாவிக் குதிக்கச் செய்தது.
இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் -3 வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4-வது நாடு என்றும் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கியப் பின் அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்றும் ஆய்வு செய்து நிலவின் மர்மங்களை உலகுக்கு சொல்லியது.
இந்நிலையில் நிலவில் இரவு தொடங்கப்பட உள்ள நிலையில் பிரக்யான் ரோவர் உறக்க நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. செப்.22 நிலவில் மீண்டும் சூரிய ஒளி கிடைக்கும் போது மீண்டும் செயல்படும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ விக்ரம் லேண்டரில் ஹாப் சோதனை மேற்கொண்டு மீண்டும் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கச் செய்தது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட’ X’ பதிவில், “விக்ரம் மீண்டும் நிலவில் (Soft Land) தரையிறக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் அதன் பணி நோக்கங்களை தாண்டி சிறப்பாக செயல்படுகிறது. அது ஒரு ஹாப் சோதனையையும் வெற்றிகரமாக செய்தது.
கட்டளையின் படி லேண்டர் அதன் எஞ்சினை இயக்கி நிலவில் இருந்து 40 செ.மீ-க்கு மேல் எழும்பி பறந்து 30-40 செ.மீக்கு அப்பால் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த சோதனை எதிர்கால திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வருவதற்கும், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டங்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும்” என்று கூறியது.
மேலும், அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்படுகின்றன என்றும் ராம்ப், ChaSTE மற்றும் ILSA ஆகியவையும் சோதனை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.