ஆரணியில் முதியவர்களை குறி வைத்து நூதன முறையில் ஏ.டி.எம் கார்டை அபகரித்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய நபரை பொறி வைத்து பிடித்த போலீசார்..
அவனிடமிருந்து 7ஆயிரம் ரூபாய் மற்றும் 13 ஏ.டி.எம் கார்டை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கார்த்திகேயன் ரோடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் கோவிந்தராஜ் (72) இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும் மோகன் குமார், கௌரிசங்கர், என்ற 2 மகனும் கமலா என்ற மகளும் உள்ளனர்.
மேலும் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் கோவிந்தராஜ் கடந்த மாதம் 27.10 23 அன்று ஆரணி ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த வாலிபர் தங்களின் ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி ஏமாற்றி மாற்று ஏ.டி.எம் கார்டை திருப்பிக் கொடுத்துவிட்டு பணம் வரவில்லை என்று கூறி நூதன முறையில் முதியவரை ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் 22ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
மேலும் இது சம்மந்தமாக வங்கியிலும் ஆரணி நகர காவல் நிலையத்திலும் முதியவர் கோவிந்தராஜ் புகார் அளித்துள்ளார்.
பின்னர் இன்று மீண்டும் தனது வங்கி கணக்கில் இருந்து புதிய ஏ.டி.எம் கார்டு மூலம் பணத்தை எடுக்க முதியவர் சென்றுள்ளார்.
முன்பு பின் தொடர்ந்து வந்த அதே வாலிபர் மீண்டும் வந்ததை கண்டு வங்கி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் முதியவர் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து முதியவரை மீண்டும் ஏ.டி.எம்மில் பணத்தை எடுக்க போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்த போது முதியவரிடம் மீண்டும் அந்த வாலிபர் ஏ.டி.எம் கார்டில் பணம் எடுக்க உதவி செய்ய கேட்ட போது மறைந்திருந்த போலீசார் பொறி வைத்து கையும் களவுமாக அந்த வாலிபரை மடக்கி பிடித்து ஆரணி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தங்கள் பாணியில் விசாரணை செய்தனர்..
விசாரணையில் டெல்லி மாநிலம் பிரேம் நகரை சேர்ந்த சஞ்சய்(32) என்பதும் முதியோர்களை குறி வைத்து ஏ.டி.எம்மில் நூதன முறையில் பணம் கொள்ளையடிப்பது எனத் தெரிய வந்தன.
பின்னர் அவனிடமிருந்து 7 ஆயிரம் ரொக்க பணம் 13 ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்…..