வேலூரில் ரவுடி எம்எல்ஏ ராஜா சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காரில் தப்பிய கும்பலை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் அடுத்த அரியூர் பாரதி தெருவைச் சேர்ந்தவர் ராஜா என்ற எம்எல்ஏ ராஜா. இவர் மீது கொலை, மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர். அரியூர் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர். மிரட்டல் வழக்கு தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைதான எம்எல்ஏ ராஜா, சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் இன்று (ஜூலை-2) மாலை 7 மணியளவில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ராஜாவை காரில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயங்களுடன் அந்த இடத்திலே சரிந்துவிழுந்த ராஜா உயிரிழந்தார். இந்த தகவலை அடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று எம்எல்ஏ ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பிய கொலையாளிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகள், சுங்கச்சாவடிகளில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில், கணியம்பாடி அருகேயுள்ள வல்லம் சுங்கச்சாவடி பகுதியில் கொலையாளிகள் தப்பிச் சென்ற காரை வேலூர் தாலுகா காவல் ஆய்வாளர் சுபா தலைமையிலான காவலர்கள் சுற்றிவளைத்தனர். காரில் இருந்த கொலையாளிகள் நான்கு பேரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், அரியூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு, அஜித்குமார், ராஜேஷ், தேஜேஷ் என்றும் எம்எல்ஏ ராஜாவை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டனர்.
காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அரியூரில் உள்ள இளைஞர்கள் சிலருக்கு எம்எல்ஏ ராஜா கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் ஒன்று சேர்ந்து ராஜாவை கொலை செய்துள்ளது தெரியவந்தது. அவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு அரியூர் பகுதியில் சிறை வார்டன் உள்ளிட்ட 3 பேரை வெட்டி கொலை செய்த வழக்கில் எம்எல்ஏ ராஜா முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.