2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ‘எதிர் – உச்சக்கட்ட காட்சியாக முடிய, இந்திய அணியின் ஐசிசி கோப்பை கனவு அன்று தகர்ந்தது. ஆனால், அதே ரோகித் – கோலி கூட்டணி இப்போது ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. தோனிக்குப் பிறகு இந்திய அணி வென்றுள்ள ஐசிசி சாம்பியன் பட்டம் இது.
இந்த உலகக் கோப்பைக்காகத்தான் காத்திருந்தது போல் ரோகித் சர்மா விராட் கோலி இருவரும் சர்வதேச டி20-யிலிருந்து ஓய்வு அறிவித்தனர். இந்நிலையில் இந்திய வீரர்கள் உலக சாம்பியன்களான பிறகு வெளிப்படுத்திய கருத்துக்கள் வருமாறு:
ரோகித் சர்மா:-இதை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், ஒரு தொடரை வெல்ல வேண்டுமென்றால் அதற்கு பின்னணியில் நிறைய விஷயங்கள் நடக்கும். நிறைய முயற்சிகள், நிறைய சிந்தனைகள் ஒன்றிணைதல் தேவை. நான் உண்மையில் இந்த வீரர்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன். அணி நிர்வாகத்திலும் எங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ள அனுமதித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் முழுதுமே எங்கள் கூட்டிணைந்த செயல்பாடு அருமை.
இதற்கு முன்பாக ஹை பிரஷர் ஆட்டங்களில் ஆடி தோல்வியின் பக்கம் முடிந்திருக்கிறோம். ஆனால் இன்று அப்படியல்ல, வீரர்களுக்கும் இது நன்கு தெரியும். கடந்த 3-4 ஆண்டுகள் இந்தத் தருணத்துக்காக கடுமையாக வேலை செய்தோம். திரைக்குப் பின்னால் ஏகப்பட்ட விவாதங்கள், உழைப்புகள், சிந்தனைகள், உத்திகள் என்று ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்தோம்..
ஆட்ட நாயகன் விராட் கோலி:– இதுதான் என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை. இதில் என்ன சாதிக்க வேண்டும் என்று வந்தோமோ அதை சாதித்து விட்டோம். ஃபைனல் ஒர் அருமையான கேம். நானும் ரோகித்தும் பேட் செய்ய இறங்கியபோது ரோகித்திடம் நான் சொன்னேன். ஒரு சில நாளில் ரன் எடுக்க முடியாது என்று தோன்றும், பிறகு இறங்குவோம். விஷயங்கள் தானாகவே நிகழும்’ என்று. கடவுள் மகத்தானவர். நன்றியில் சிரம் தாழ்த்துகிறேன்.
அணிக்காக நான் ஓர் இன்னிங்ஸை ஆடி கோப்பையை வென்றது, அதுவும் அணிக்குத் தேவைப்படும்போது செய்வது மனநிறைவை அளிக்கிறது. இதுதான் எனது கடைசி டி20 சர்வதேசப் போட்டி. தோற்றிருந்தால் ஓய்வு அறிவித்திருக்க மாட்டேன் என்பது வெளிப்படையான ரகசியம். சில பிரமாதமான வீரர்கள் காத்திருக்கின்றனர். அவர்கள் கையில் ஒப்படைக்கிறோம்..
ஹர்திக் பாண்டியா:– இது எங்களுக்கு பெரிய விஷயம். மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது. கடினமாக உழைத்து ஆடுகிறோம். ஆனால், ஏதோவொன்று கிளிக் ஆகாமல் போய்க்கொண்டிருந்தது. ஆனால், இன்றைய நாள் தேசமே விரும்பிய ஒன்றை நாங்கள் நிறைவேற்றிக் கொடுத்தோம். எனக்கு தனிப்பட்ட முறையில் கடந்த 6 மாதங்கள் சரியாக இல்லை. நியாயமற்ற விஷயங்கள் எனக்கு நடந்தன. ஆனால் கடினமாக உழைத்து அணிக்காக ஆடி வெற்றி பெற்றுக்கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து தேற்றிக் கொண்டேன். இந்த வெற்றி, கனவு வெற்றி..
தீர்ந்தது 11 வருட கோப்பை தாகம்:-இந்திய அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களில் வெற்றி கண்ட நிலையில், கனடாவுக்கு எதிரான கடைசி ஆட்டம் மழை காரணமாக ரத்தாயிருந்தது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியானது வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளை தோற்கடித்தது. தொடர்ந்து அரை இறுதியில் கடந்த சாம்பியனான இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர் முழுவதுமே இந்திய அபாரமான செயல் திறனைவெளிப்படுத்தி சிறந்த பார்மில் இருந்தது.
டி20 உலகக் கோப்பையின் அறிமுக தொடரான 2007-ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அதன் பின்னர் ஒரு முறை கூட மகுடம் சூடவில்லை. அதேவேளையில் ஐசிசி தொடர்களில் கடைசியாக இந்திய அணி 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. அதன் பிறகு 11 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று ஏமாற்றம் அடைந்தது. இம்முறை இந்திய அணி தடைகளை கடந்து கோப்பை வறட்சியை போக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடந்தேறிவிட்டது. 11 வருட கோப்பை தாகத்தை தீர்த்தது ரோகித் தலைமையிலான இந்திய அணி.
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி..
சூர்யகுமார் அபார கேட்ச்:- கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் மில்லர் இருந்தார். அந்த ஓவரை பாண்டியா வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார் மில்லர். பவுண்டரி லைனில் இருந்த சூர்யகுமார் யாதவ் அசத்தல் கேட்ச் பிடித்து கலக்கினார். பந்தை பிடித்து, அதை காற்றில் தூக்கி போட்டு, பவுண்டரி லைனுக்கு வெளியில் சென்று, மீண்டும் உள்ளே வந்து கேட்ச் பிடித்திருந்தார். மில்லர் அவுட். அது அபாரமான கேட்ச். இரண்டாவது பந்தில் பவுண்டரி விளாசினார் ரபாடா. அது எட்ஜ் ஆகி சென்றது. 4 பந்துகளில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
தித்திக்கும் வழியனுப்பு விழா: மேற்கு இந்தியத் தீவுகளில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றுடன் நடையை கட்டிருந்தது. இப்போது டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வென்றிருப்பது, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு சிறப்பான வழியனுப்பு விழாவாக அமைந்துள்ளது. ஏனெனில், இந்த தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவடைவது கவனிக்கத்தக்கது.