சென்னை-தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.
புதுச்சேரி மாநிலம் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கடலுாரைச் சேர்ந்தவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல் பரவியது.
கோவையில் பணியாற்றும் அந்நபர் சமீபத்தில் கேரளா சென்று திரும்பிய நிலையில், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது இதனால், அவருக்கு, நிபா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதியானது. எனினும் இதர காய்ச்சல் காரணமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்
இந்நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருவதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது
தமிழக – கேரளா எல்லையில் கண்காணிப்பு பணி தொடர்ந்து வருகிறது. பயணியருக்கு காய்ச்சல் பரிசோதனை வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோர் எப்போது தமிழகம் வருகின்றனர் என்பனவற்றையும் கண்காணித்து வருகிறோம் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை. தொடர்ந்து கண்காணிப்பு பணி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்..