ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவது காவல் துறையில் உள்ள லஞ்ச விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிபுரிவேன் என்று சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ஐபிஎஸ் அதிகாரி அருண் கூறியுள்ளார்..
சென்னையில் கடந்த 5-ஆம் தேதி இரவு பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் 11 பேரை செம்பியம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர் . மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்..
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு புதிய காவல் ஆணையராக அருணை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை மாநகர 110-வது காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்..
110-வது காவல் ஆணையர் அருணின் பின்புலம்:- தமிழக காவல் துறையில் 1998-ஆம் ஆண்டு அருண் ஐபிஎஸ் அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார். இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல் துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்துள்ளார்..
ஐபிஎஸ் பயிற்சி முடித்த பிறகு நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றினார். பின் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) பணியாற்றி வந்த இவர் பின்னர், சென்னை அண்ணா நகர் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய நிலையில் 2012-ல் காவல் துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணை தலைவரானார்.
அதன் பிறகு சென்னை மாநகரில் போக்குவரத்து மற்றும் சட்டம் – ஒழுங்கு இணை ஆணையராகவும், அதனை தொடர்ந்து, 2016-ம் ஆண்டு காவல் துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும், 2021-ம் ஆண்டு மீண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இரண்டாவது முறையாக பொறுப்பு வகித்தார்..
ரவுடியிசத்தைக் கட்டுப்படுத்துவேன்: – சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட அருண் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நான் சென்னையில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் துணை ஆணையர், இணை ஆணையர் என சட்டம் ஒழுங்கிலும், போக்குவரத்து பிரிவிலும் பணிபுரிந்துள்ளேன். எனவே, சென்னை எனக்கு புதிது இல்லை. காவல் ஆணையர் பதவியை மற்றொரு முக்கிய பொறுப்பாக பார்க்கிறேன். ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவது, காவல் துறையில் உள்ள லஞ்ச விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது, கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிபுரிவேன்” என்றார்.
ரவுடிகளுக்கு புரியும் மொழியில்… – ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முன்னதாகவே உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தும் அதை காவல்துறை பொருட்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது என்றார். ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றால் என்கவுன்டர் சம்பவங்கள் இருக்குமா என்ற கேள்விக்கு ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் பதிலளிப்போம்” என சூசகமாக தெரிவித்தார்.