செங்கம் பகுதியில் கடந்த எட்டு நாள்களில் ஏற்பட்ட 2 சாலை விபத்துகளில் மட்டும் 14 பேர் மரணமடைந்திருக்கின்றனர் – பயங்கர விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம்.

செங்கம் பகுதியில் கடந்த எட்டு நாள்களில் ஏற்பட்ட 2 சாலை விபத்துகளில் மட்டும் 14 பேர் மரணமடைந்திருக்கின்றனர் – பயங்கர விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள கருமாங்குளம் பகுதியில் நேற்று இரவு காரும் அரசுப் பேருந்தும் நேருக்குநேர் மோதிக்கொண்டன..

இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 4 பேர் கவலைக்கிடமான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்..

விபத்தில் பலியானவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கெலமங்கலம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது..

தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கெலமங்கலம் பகுதியில் செயல்பட்டுவரும் நிறுவனமொன்றில் இவர்கள் பணிபுரிந்து வந்திருக்கின்றனர். ஆயுதபூஜை விடுமுறையையொட்டி காரில் புதுச்சேரிக்கு இன்பச் சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் கெலமங்கலம் நோக்கி திரும்பியபோது விபத்து நடந்துள்ளது..

இதேபோல் கடந்த 15-ம் தேதியும் செங்கம் பக்கிரிபாளையம் பகுதி பைபாஸ் சாலையில் காரும் லாரியும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. அந்தக் கோர விபத்திலும், கார் அப்பளம்போல நொறுங்கியதில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த 2 விபத்துகளுமே ஒரே பகுதியில் 8 நாள்களுக்குள் நடந்தவை..

மொத்தமாக 14 நபர்கள் இறந்துள்ளனர்…

கடந்த மாதம்கூட செங்கம் பகுதிக்குட்பட்ட இதே பைபாஸ் சாலையில் சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் திருப்பத்தூர் காக்கனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் துடிதுடித்து உயிரிழந்தனர்..

இடையிடையே ஏற்பட்ட சின்னச்சின்ன விபத்துகளிலும் ஒன்றிரண்டு உயிர்கள் பலியாகின. இதனால், செங்கம் வழியாக பெங்களூரு – திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் பயணம் செய்யவே வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்..

PUBLISHED BY : கு. கௌரிசங்கர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News)

அனைத்தையும் விசாரணை களம் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்..