சென்னை, வேப்பேரியில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவையாற்றிவரும் பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான வள்ளல் பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு (தூண்டல் நாள்) விழா நடைபெற்றது..
இவ்விழாவிற்கு மாண்புமிகு நீதியரசர், அறக்கட்டளைத் தலைவர், பொன். கலையரசன் அவர்கள் தலைமை தாங்கினார். சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் S.ஏழுமலை நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்வில் மாண்புமிகு நீதியரசர் பொன். கலையரசன் பேசுகையில்:-
இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்கல்வி கல்லூரி தொடங்கப்பட்டது செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைதான். அத்தகைய பெருமைவாய்ந்த அறக்கட்டளை கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புக்களை கட்டாயம் நாங்கள் உருவாக்கித் தருகிறோம். மாணவர்கள் கல்வி கற்றலுடன் ஒழுக்கத்தை கடைபிடித்து சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் k. ஏழுமலை பேசுகையில்:-
சென்னை, திருவல்லிக்கேணியில் செங்கல்வராய நாயக்கர் அவர்களின் கொள்ளுப்பேரன் வீட்டில்தான் நான் தங்கிப்படித்தேன். அந்த வகையில் செங்கல்வராய நாயக்கருக்கும் எனக்கும்கூட தொடர்பு உண்டு. இன்றைக்கு விஞ்ஞானம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் ஒழுக்கத்தை மட்டும் எப்போதும் விட்டு விடக்கூடாது. ஒழுக்கத்துடன் சிறந்து விளங்க வேண்டும். இன்றைக்கு கல்வி என்பது மாறிக்கொண்டே உள்ளது. எனவே, மாணவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு படிக்கவில்லை என்றால் நாம் எந்த துறையிலும் சிறந்து விளங்க முடியாது. ஆகையால் மாணவர்கள் எதையும் என்னால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.
இவ்விழாவில் அறக்கட்டளை அறங்காவலர்கள் திரு.V. சந்திரசேகரன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), மாவட்ட நீதிபதி (ஓய்வு) S. சாத்தப்பிள்ளை, மருத்துவர் R.கண்ணையன், திருமதி S.ரேணுகா, பொறியாளர் H. வெங்கடேஷ், முனைவர் B.அரிஸ்டாட்டில், திரு. M. ராஜேந்திரன் திரு. M.N. விஜயசுந்தரம், முன்னாள் மாவட்ட நீதிபதி (ஓய்வு), அறக்கட்டளைச் செயலாளர் திரு. M. சாம்பசிவம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் புலத்தலைவர், தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலாளர், கலை, அறிவியல் கல்லூரி கல்வி ஆலோசகர் முனைவர் K. மின்ராஜ் அவர்களும், முதன்மைப் பொறியாளர், முன்னாள் அறக்கட்டளை அறங்காவலர் திரு. K. ஜெகநாதன், பொறியியல் மற்றும் பல்தொழில் நுட்பக் கல்லூரியின் இயக்குநர் முனைவர் M. அருளரசு அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்..

கலை, அறிவியல் கல்லூரி முதல் தளத்தில் செயல்பட்டு வரும் பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்று UPSC Prelims – தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர் ஆர். சூர்யாவை மாண்புமிகு நீதியரசர் பொன். கலையரசன் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். அப்போது ஐஏஎஸ் பயிற்சி மைய இயக்குநர் திரு.ஜீவா உடனிருந்தார். அத்துடன் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவர்களில் பனிரெண்டாம் வகுப்பில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற நான்கு மாணவர்களை மேடைக்கு அழைத்து மாண்புமிகு நீதியரசர் பொன். கலையரசன் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்.
நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் (பொ.) முனைவர் த. இளந்தமிழன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இறுதியாக கணிதத்துறைத் தலைவர் முனைவர் கோ.வாசுதேவன் நன்றியுரை வழங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அ. அமுல்ராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் அறக்கட்டளைக் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.