திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இளங்குண்ணி ஊராட்சியில் உள்ள ஏரியில் திடீரென மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதப்பதால் ஏரியில் உள்ள நீர் முழுவதும் மாசு அடைத்து துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்..
இளங்குண்ணி கிராமத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான குடிநீர் இளங்குண்ணி ஏரியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு கிணறுகள் அமைத்து அதன் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் இளங்குண்ணி ஏரி நிரம்பி உள்ளது இதனால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் கிணறு முழுவதும் ஏரி நீர் கலந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது ஏரியில் உள்ள மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதப்பதால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் துர்நாற்றம் வீசியுள்ளது
இதனை தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரிடம் சென்று அப்பகுதி மக்கள் தெரிவித்தபோது உங்களுக்கு என்ன மினரல் வாட்டரா கொடுக்க முடியும் என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர் இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தற்போது டெங்கு காய்ச்சல் மர்ம காய்ச்சல் விஷ காய்ச்சல் என அதிகரித்து வரும் நிலையில் மாசு அடைந்த குடிநீரை அப்பகுதி மக்கள் குடித்து வருவதால் வாந்தி பேதி ஏற்பட்டு வருவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு முறையான குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.