கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்தகுமார் இன்று ஜூலை 3 தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக ஆணையரிடம் கொடுத்துள்ள ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்..
இதற்கிடையே மேயர் பதவியிலிருந்து கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்ததன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது, மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றதிலிருந்தே அவரது செயல்பாடுகள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்தன. ஒப்பந்த விவகாரங்களில் தலையிடுவது ஒப்பந்ததாரர்களுடன் பேசுவது, திட்டப்பணிகளில் தலையிடுவது என அவரது நிர்வாகத்தில் கணவர் ஆனந்தகுமாரின் தலையீடு அதிகமிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன..
மேலும் மேயரின் தாயார் வசித்து வந்த வீட்டருகே வசிக்கும் பெண் ஒரு விவகாரம் தொடர்பாக மேயர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தள்ளுவண்டிக் கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த விவகாரமும் ஆனந்தகுமார் மீது எழுந்தது..
மேலும் மன்றக் கூட்டங்களிலும் மேயருக்கு எதிராக மண்டல தலைவர்களே குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். கோவையில் ஆளுக்கட்சிக்கு எம்எல்ஏக்கள் இல்லாத சூழலில், அக்குறையைப் போக்கும் வகையில் இவர் திறம்பட செயலாற்ற வேண்டும் என தலைமையும், கட்சியினரும் எதிர்பார்த்தனர்..
ஆனால், இவரோ உரிய அனுபவம் இல்லாததால் கவுன்சிலர்களை எதிர்கொள்வதில் சிரமப்பட்டார். மன்றக் கூட்டங்களில் பெரும்பாலும் ஆணையரே கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சமாளித்து வந்தார்..
இதைவிட முக்கியமாக, கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட அண்ணாமலை, நகர்ப்புறங்களில் அதிக வாக்குகளை பெற்றார்..
ராஜினாமா செய்த 2-வது மேயர்:-கோவை மாநகராட்சியின் மேயராக கடந்த 2011-ம் ஆண்டு பதவி வகித்து வந்த அதிமுகவின் செ.ம.வேலுசாமி கடந்த 2014-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், இடைத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய மேயர் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது, மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவிக்காலம் முடியும் முன்னரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.