நாகரீகத்தின் தொன்மையை கணக்கிடுவதில் நாணயம்,உலோகம் மற்றும் கற்கருவிகள், பாண்டங்கள் ,கல்வெட்டுகள் ,கட்டுமானங்கள் என பல்வேறு பொருட்கள் அகழ்வாராய்ச்சி மூலம் உதவி வருகின்றன.
தமிழ்நாட்டிலும் நடத்தப்படுகின்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் மேற்குறிப்பிட்ட அனைத்தும் தமிழரின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கிடைத்து வருகின்றன. அவற்றில் முக்கிய பங்கு மண் சார்ந்த இனங்கள் அதிகமாக காணக்கிடைக்கின்றன. மண்ணால் செய்யப்பட்ட பாண்டங்கள், கருவிகள், கட்டுமானங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பூமிக்கடியிலும் அழியாமல் இருப்பதும் அவற்றில் பல்வகை கலையின் நயங்கள் காண்பதும், தமிழ் எழுத்துக்கள் மற்றும் வரலாற்று சித்திரங்கள் பொறிக்கப்பட்டிருப்பதும் அதிசயதக்கதாக உள்ளன.
ஆதிமனிதன் கல்லாதவன், கற்காலத்தவன், நாகரீகமற்றவன், மொழித்திறன் இல்லாதவன் என்று தற்கால மக்கள் கருதுகின்ற பொய்யான எண்ணத்தை அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் சான்றுகள் முறியடிக்கின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை தமிழ்நாட்டில் மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. எனினும் நவீன மயம் காரணமாக மண்பாண்ட உபயோகம் மறந்து போகின்ற அளவிற்கு பிற உலோக பாண்டங்களில் மக்கள் கவனம் செலுத்துவதால் மண்பாண்ட தொழில் காலபோக்கில் அழிந்து வருகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஜாதி, சமய, மொழி, இனம் வேறுபாடுகள் இல்லாமல் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகின்ற தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை காலத்தில் மட்டும் தற்போதும் மண்பாண்டங்கள் வாங்கி பொங்கலிடும் வழக்கம் பின்பற்றபடுகிறது என்றாலும் விற்பனையாகின்ற மண்பாண்டங்களின் எண்ணிக்கையும், அளவும் மிக மிக சரிவில் சென்றுள்ளன.
இத்தகைய சூழ்நிலையிலும் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே சம்புவராய மன்னர்களின் தலைநகராக விளங்கிய மற்றும் உலக பிரசித்திபெற்ற அருள்மிக ரேணுகாம்பாள் அம்மன் கோயில் அமைந்துள்ள படவேட்டில் மண்பாண்ட தொழிலை மரபு ரீதியாக செய்து வரும் சில குடும்பத்தினர் இன்றும் ஆண்டு முழுவதும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மண்பாண்டங்களை மக்களுக்கேற்ற வகையில் செய்து வருகின்றனர். இவர்களில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூத்த குடிமகன் தருமலிங்கம் என்பவர் மண்பாண்டத்தொழிலை செய்வதுடன் அத்தொழிலில் புதுமையை புகுத்தி வேறெங்கும் இல்லாத வகையில் தன் படைப்புகளை மண்பாண்டங்கள் செய்வதில் தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறார் .
தர்மலிங்கம் முழுமையாக மண்ணாலான இட்லி சட்டி, வெப்பகுடுவை (பிளாஸ்க்),மேஜிக் கூஜா, மேஜிக் விளக்கு, புகையில்லா அடுப்பு, சிட்டுக்குருவி இன்னும் பல பாண்டங்களை பயிற்சி மற்றும் அனுபவத்தின் வாயிலாக புதுமையாக படைத்து வருகிறார்.
மண்பாண்ட புகையில்லா அடுப்பு தயாரிப்பதில் மாநில அரசின் பயிற்சி சான்றிதழும், பொதுவாக மண்பாண்ட தொழில் பயிற்சி மத்திய அரசு சான்றிதழும் கொண்டிருக்கக்கூடியவரும் அனுபவசாலியும் என்பதால் பயிற்சி மற்றும் முயற்சியால் மண்பாண்ட தொழிலில் வித்தியாசமான வகையில் புதுமையான கண்டுபிடிப்புகளை செய்து வருவதாக தர்மலிங்கம் கூறியதுடன். அந்த பொருட்களை பயன்படுத்தி காட்டி விளக்கங்களையும் கூறினார் அவை, மண்பாண்டங்கள் மட்டுமே பஞ்ச பூதங்களாகிய நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றன. எனவே இப்பாண்டங்களில் உணவு சமைப்பதும், நீர் அருந்துவதும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடியது என்பதையும் தெரிவித்தார் .
மேஜிக் கூஜாவின் அடிபகுதியில் உள்ள துவாரம் வழியாக தண்ணீர் ஊற்றி ,மேற்பகுதியை தலைகீழாக கவிழ்த்தால் கூஜாவின் மூக்கில் தண்ணீர் வெளி வருகிறது, இதே முறையில் விளக்கில் எண்ணை நிரப்பி தீபம் ஏற்றப்படுகிறது. வெப்பக்குடுவை (பிளாஸ்க்)சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் தண்ணீரை பாதுகாத்து வடி கட்டிய முறையில் தூய குளிர்ந்த நீரை வழங்குகிறது.
அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிட்டுக்குருவி வடிவத்தில் மண் பொம்மை தயாரித்து அதன் வால் பகுதியில் வாயால் ஊதினால் விசில் ஓசை வருகிறது. அதே பொம்மையின் கொண்டை பகுதியில் உள்ள துவாரம் வழியாக தண்ணீர் ஊற்றி ஊதினால் உண்மையான சிட்டுக்குருவியின் குரல் ஓசை போல ஒலிப்பது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆச்சரியப்படவைக்கிறது. என்பதையும் செய்து காட்டினார். தனிமனிதன் பிற மனிதர்கள் நலத்திற்கும் குருவி போன்ற உயிரனங்களின் பாதுகாப்பிற்கும் தன் தொழில் ரீதியாக மண்பாண்ட தொழிலில் புதுமையை புகுத்தி வருவதை அவர் வசிக்கும் பகுதி மக்களுக்கு மட்டுமே தெரிந்ததாக உள்ளதை விரிவு படுத்தம் வகையில் தன்னார்வ அமைப்புகள் ஓரளவுக்கு வழி செய்தாலும் அரசு தரப்பில் எந்த விதமான ஆதரவும் அளிக்காதது தர்மலிங்கத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் மிகவும் வேதனையை உண்டாக்கி உள்ளது.
அரசாங்கங்கள் அமைச்சர் பதவி வழங்குவதற்காக பல துறைகளை அதிகரித்து இருக்கின்றன ஆனால் அந்தந்த துறைகள் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றனவா என்பதை கணக்கீடு செய்தால் பதில் திருப்தியாக இருக்காது என்பது இப்பகுதி மண்பாண்ட புதுமைகளை வெளிக்கொண்டுவராததிலிருந்தே தெரிய வருகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை ,தொல்லியல் துறை, கலை ,பண்பாடு மற்றும் கலாச்சாரத்துறை, ஆகியன அழிந்து வரும் மண்பாண்ட தொழிலில் முதுமையில் புதுமைகளை படைத்து வரும் சம்புவராய மன்னர்களின் தலைநகராக விளங்கிய படவேடு தர்மலிங்கம் போன்றோரை உலகளவில் அவர்களது தொழில் நுணுக்கத்திற்காக வெளிப்படுத்த தேவையான நடவடிக்கைகைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமல்லவா?