கடந்த வாரம் ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழகத்தில் விழுப்புரம்,கடலூர் திருவண்ணாமலை,ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பெரும் அளவு சேதாரம் ஏற்பட்டது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேவூர்,குன்னத்தூர்,கண்ணமங்கலம்,ஒன்னுபுரம், அம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் கனமழையால் பெருமளவில் சேதாரங்கள் ஏற்பட்டது.
இந்நிலையில் ஒன்னுப்புரம் கிராமத்திலிருந்து வி.வி தாங்கள் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் முழுமையாக தேங்கியுள்ளது. இதனால் வி.வி தாங்கள் கிராமத்தில் இருந்து கண்ணமங்கலம், ஆரணி, வேலூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் சுரங்க பாதையில் செல்ல முடியாமல் ரயில்வே தண்டவாளத்தின் மீது ஏறி உயிருக்கு ஆபத்தான வகையில் செல்கின்றனர்.
மழை நின்று ஒரு வார காலம் ஆகியும் இன்னும் மழை நீர் வெளியேறாததால் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும் எனவும் தொடர்ச்சியாக மழை காலங்களில் இதுபோன்று சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க வசதி செய்து தருமாறும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.