பாரதிய ஜனதா மாநிலத் தலைமையின் செயல் , கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது – அதிமுக தீர்மானம்..
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சியின் தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான அவசர ஆலசோனைக் கூட்டம் இன்று (செப் 25) மாலை நடைபெற்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..
இந்த கூட்டத்தில், பாரதிய ஜனதா மாநிலத் தலைமையின் செயல் , கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும், தொண்டர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து இன்று முதல் விலகிக் கொள்வதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவை அதிமுக முறித்துக்கொண்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, ” என் மண், என் மக்கள் நடைபயணத்தில் இருப்பதால் அரசியல் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும், அஇஅதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை படித்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சியின் தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் கூறினார்…